சிற்றரசர்கள் முடி சூடும் இடமாக திகழ்ந்த நமது பகுதி இன்று சீரழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. தூய்மையான காற்றும் இங்கே மாசால் மரணிக்க துவங்கிவிட்டது. அள்ளப்படும் நீரால் நிலங்களும், நல்ல வளங்களும் வஞ்சிக்கப் படுகின்றது.
இயற்கையாய் வெளிப்படும் கார்மேகம் கூட இன்று தொழிற்சாலை மாசின் செயற்கையால், நமக்கு கானல் கார்மேகமாய் காட்சி தருகின்றது.
வருடம் தவறாமல் பொழிந்த வருண பகவானையே தோற்கடித்து, இன்று நச்சு துகள் கலந்த மாசு மழை பொழியும் மகத்தான நிலைக்கு நமது பகுதி சென்று கொண்டிருக்கின்றது.
கிணற்றில் நீர் சுரந்த நிலை மாறி, இன்று இயந்திர உதவியுடன் 200 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தாலும், நீரை காண முடியவில்லை. மீறி நீரை கண்டுவிட்டால் அதனை பயன்படுத்தும் அளவுக்கு தரம் இல்லை. பூமிக்கு மேலேயும் மாசு, கீழேயும் மாசு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.
இதனை கண்டும் நாம் காணாமல் இருக்க காரணம் நம் சுயநல வாழ்வியல் முறையால் நமது இன்றைய பொழுது இனிதே சென்று கொண்டிருக்கின்றது. ஆனால் நாளைய சந்ததியின் நிலையை என்றாவது நினைத்ததுண்டா?
எங்கோ எவரோ, மாசால் நோய்ப்பட்டு, சுத்தமில்லா நீரை பருகி போலியோ போன்ற நோய்க்கு உள்ளாகி உடல் ஊனமுற்று துன்பப்படும் நிலை நாளை நம் மகனுக்கும், பேரனுக்கும் ஏற்படாமல் இருந்து விடுமா?
சிந்தியுங்கள். சீரழியும் நமது பகுதி முற்றிலும் சிதைந்து போவதற்கு முன்னர் விழித்திடுவோம். வருங்கால சந்ததிக்கு பொன்னும், பொருளும் மட்டுமல்லாமல் நல்ல வாழ்வாதரத்தையும் வழங்கிடுவோம்.
கரம் கோர்ப்போம். நல்லறம் புரிவோம்.
|