எங்களைப்பற்றி:
எம் எல் ஆர் கிரிக்கெட் அகாடமி | என் வீடியோ |
ஆட்டோகிராப் கலெக்ஷன் | பேப்பர் கட்டிங்ஸ் |
எம்.எல்.இராஜேஷ் பிரபலங்களுடன் | பிற |
ஒருநாடு தனது நாட்டுத் தலைவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவது, சிலை வைப்பது, நாணயம் ஆகியவைகளை வெளியிட்டுக் கௌரவிப்பதே மிகப் பெரிய விஷயம். அத்தகைய சொந்த நாட்டின் கௌரவத்தைப் பெறுவதற்கே, அந்த மதிக்கத்தக்கத் தலைவர் எந்த அளவிற்கு மக்களின் அபிமானத்தையும் அன்பையும் பெற்றிருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அத்தகைய நிகழ்வு நடந்தாலும் அதே மாதிரி மற்ற நாடுகளும் அஞ்சல் தலை, நாணயம் வெளியிடுமா? என்பது அதைவிட மிகப்பெரிய விஷயம். அவ்வாறு நடந்தாலும் அதிகபட்சமாக ஒருசில நாடுகள் வெளியிடக்கூடும். அந்த நாடுகளும் மிகவும் நெருக்கமான நேச நாடுகளாகவே இருக்கும்.
அப்படி இருக்கும்போது அஞ்சல் தலை, சிலை, நாணயம் ஆகியவற்றின் மூலமாக நுõற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒருவரைக் கௌரவப்படுத்தி இருக்கின்றன என்றால் அந்த மனிதர் எந்த அளவிற்கு உலக நாட்டு மக்களின் மனதிலும், தலைவர்களின் மத்தியிலும் போற்றக்கூடிய மற்றும் வணங்கத்தக்க மனிதராக இருப்பார் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அந்த மனித தெய்வம் மகாத்மா காந்தியின் மகத்துவத்தை வார்த்தைகளுக்குள் வளைத்துவிட முடியுமா என்ன?
அகிம்சை என்னும் ஆயுதத்தால் உலகையே வெல்லலாம் என்று உணர்த்தி, வென்றும் காட்டி இன்று உலக அமைதியின் சின்னமாகப் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும், நமது தேசத்தந்தையின் சிந்தனைகளான, அன்பு, அகிம்சை, சமத்துவம், உண்மை, சகோதரத்துவம் ஆகியவைகளை அனைவரும் (குறிப்பாக இளைய தலைமுறையினர்) பின்பற்றினாலே உலகம் அமைதிப்பூங்காவாக மாறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
எந்த ஒரு தனிமனிதருக்கும் கிட்டாத அரிய பெருமைகளைக் கொண்ட இந்த மாமனிதரின் அரிய பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளவும், இயன்றவரை காந்திஜியைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் ஒருசேர அனைவருக்கும் கிடைத்திடவும் இதன்மூலம் காந்திய சிந்தனைகளை அனைத்துத் தலைமுறையினரும் உணர்ந்து கொள்ளவும், அதைப் பின்பற்றுவதற்கான ஒரு சூழலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இது. குறிப்பாக, ஆரம்ப காலங்களிலேயே ஆசிரியப் பெருமக்கள் குழந்தைகளிடம் காந்தியச் சிந்தனைகளை விதைக்க வேண்டும். அத்தகைய செயல்பாடுகள்தான் மிக எளிதாக அமைதியான உலகம் அமைய வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை.
குறிப்பாகச் சொல்ல விரும்பும் மற்றொரு செய்தி, பொழுதாக்கம் (Hobby) என்ற ஒரு பழக்கம் ஒருவரிடம் இருக்குமானால், அவரிடம் கெட்ட பழக்கவழக்கங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது எனது ஆழமான நம்பிக்கை. அதை நான் அனுபவப்பூர்மாகக் கண்ட உண்மை. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பொழுதாக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அது எந்த வகையான பொழுதாக்கமாகவும் (Hobby) இருக்கலாம். அஞ்சல் தலை சேகரிப்பு, நாணயம் சேகரிப்பு அல்லது விளையாட்டு மற்றும் பல. அத்தகைய பொழுதாக்கம் குழந்தைகளை நெறிப்படுத்தி ஒரு சிறந்த குடிமகனாக்கும். பெற்றோர்களின் எந்த ஒரு கண்காணிப்பும் இன்றி இந்தச் செயல் நடைபெறும். கெட்டுப் போவதற்கு ஏராளமான வாய்ப்பு உள்ள இக்காலகட்டத்தில் ஒரு பொழுதாக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தாருங்கள். அது உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும். நீங்கள் அவர்களைக் கண்காணிக்கத் தேவையில்லை. அதுமட்டுமில்லாது பொழுதாக்கம் (Hobby) குழந்தைகளுக்கு ஒரு நல்ல நண்பர்கள் வட்டத்தையும் சிறந்த பொது அறிவையும் சேர்த்து வளர்க்கும்.
கடைசியாக நான் கூற விரும்பும் ஒரு வாக்கியம்.
தங்கள் அன்புள்ள,
மா.லோ.இராஜேஷ்