காந்திஜியின் சரிதை
இந்த உலகத்திற்கு ஒரே சூரியன்தான் என்றாலும் இந்தியாவிற்கு இரண்டு சூரியன். வழக்கமாக மேலிருந்து ஒளி கொடுக்கும் சூரியன் ஒன்று. மற்றொன்று மகாத்மா காந்தி. முந்தையது இயற்கை. பிந்தையது அகிம்சை.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயருடன் இந்த மண்ணில் பிறந்தவர்தான் பின்னர் தன் கொள்கைகளால் மகாத்மாவாகப் போற்றப்பட்டார். இந்தியாவின் விடுதலைக்காக பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவர் என்பதால் அவர் இந்தியாவின் தேசத்தின் தந்தை எனப் பாராட்டப்படுகிறார். அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்தை, வன்முறைக்கு அறவே இடமில்லாத, அகிம்சை போராட்டத்தின் மூலம் அடையலாம் என்பதை உலகுக்கு உணர்த்தியவர். அவரின் அப்போதைய போராட்டக்கருவிகள் இப்போதுகூட பயன்படுத்தப்படுகின்றன. இன்னமும் அந்தக் கருவிகளுக்கு கூர்மழுங்கவில்லை. மிகவும் அற்புதமான அந்தக் கருவிகளைக் கண்டு ஆட்சியாளர்கள் அலறுகின்றனர். ஆம், என்றென்றும் அப்படித்தான் இருக்கும்.
காந்திஜி, 1869ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் என்ற நகரில் பிறந்தார். கல்லுõரிப் படிப்பை முடித்த பிறகு, பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அவர் லண்டன் சென்றார். 1891ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். 1893ம் ஆண்டு, தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய சட்ட நிறுவனம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்தது. வேலைக்காக தென் ஆப்ரிக்கா சென்ற காந்திஜிக்கு, இந்தியாவிலிருந்து அங்கு சென்று குடியேறிய இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகள் அவருக்கு மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தென் ஆப்ரிக்காவில் அவர் இருந்த 20 ஆண்டுகளில், இந்தியர்கள் மற்றும் பிற இனத்தவர்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இளம் வயதிலேயே கஸ்துõரிபாயுடன் திருமணம். நான்கு ஆண் வாரிசுகள். இல்லற வாழ்வில் இருந்துகொண்டே துறவியாக வாழ்ந்து காட்டியவர். துறவி என்றால் காட்டில் போய் துறவறம் மேற்கொள்ளத் தேவையில்லை. அறவழியில் நடந்தால்போதும் என்று நடந்து காட்டியவர்.
இந்து மதத்தையே அவர் முழுமையாகப் பின்பற்றினாலும் பிற மதக் கொள்கைளையும் போற்றினார். அவரின் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலில், ஈஸ்வர், அல்லா தேரே நாம் என்ற சமய சமரச வார்த்தைகள் இடம்பெறும். பிறரின் தவறுகளை திருத்த தன்னையே வருத்திக் கொண்ட மகான் அவர்.
1914ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா திரும்பிய காந்திஜி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தேசத்துரோக குற்றச்சாட்டில் அப்பாவி இந்தியர்களைக் கைது செய்ய வழிவகை செய்த, பிரிட்டீஷாரின் ரவ்லட் சட்டத்தை எதிர்த்து அகிம்சை முறையில் போராட்டத்தைத் துவக்கினார். அது முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைவராக, இந்தியத் தலைவர்களின் வழிகாட்டியாக இருந்து, சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார்.
அவரின் 28,835 நாட்களில் 2,338 நாட்கள் சிறையில் கழித்தார். வெளியில் இருந்த நாட்களிலும் உணவருந்திய நாட்கள் வெகு குறைவு. 28 முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். குறைந்தபட்சம் ஒருநாள் துவங்கி 12 நாட்கள் வரை அவர் உணவு அருந்தாமல் தன்னைத்தானே வருத்தியுள்ளார்.
பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இந்தியச் சுதந்திரத்திற்காகவும் அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, வரி கொடா இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர். அந்த போராட்டங்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொண்டனர். எனினும், இந்துகளும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டது அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இந்த இருபெரும் சமூகத்தினரின் நல்லிணக்கத்திற்காக தன் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களைச் செலவழித்தார்.
1945ஆம் ஆண்டில், இந்தியாவை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இருநாடுகளாக பிரிப்பது என்ற யோசனையை பிரிட்டீஷ்ஷார் முன்வைத்தனர். அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் சமாதான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். மதத்தின் அடிப்படையில் இந்தியாவை துண்டாட முனைந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள், அதற்காக மவுன்ட்பேட்டன் திட்டம் என்ற ஒரு திட்டத்தை 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தனர். இதற்கு காந்திஜி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், இந்த இரண்டு மதத்ததினரும் நாட்டின் பல நகரங்களில் மோதிக் கொண்டதில் ஏராளமானோர் இறந்தனர். இது, காந்திஜிக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. கல்கத்தா மற்றும் டில்லியில் நடந்த மதக்கலவரங்களைக் கண்டித்தும், மக்கள் அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.
இந்தியா, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. அடுத்த ஆண்டில், அதாவது 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, டில்லியில், நாதுராம் விநாயக் கோட்சே என்பவனால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒருவர் வாழும்போது பெரிய அளவில் போற்றப்பட்டாலும் இறந்த பிறகு அத்தகையவர்கள் மறக்கப்பட்டதே மனித வரலாறு. ஆனால், மகாத்மா காந்தி விஷயத்தில் அப்படியில்லை. அவர் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வினாடி செயல்பாட்டிலும் நீக்கமற நிறைந்துள்ளார். உலக நாடுகளின் பெரிய நகரங்கள் துவங்கி, இந்தியாவின் குக்கிராமங்கள் வரை அவரின் திருவுருவச் சிலைகள் உள்ளன. அவர் நினைவாக மணி மண்டபங்கள், நினைவிடங்கள், அன்பு பாராட்டும் ஆசிரமங்கள், அன்பு இல்லங்கள் என காந்தியின் நினைவுப் போற்றும் அவரின் கொள்கைகளை இன்றளவும் பின்பற்றும் சமூக கலாச்சார பண்பாட்டு அமைப்புகள் உள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியர்களின் எண்ணங்களில் இருந்து காந்தி எந்த நேரமும் மறைந்து விட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் மட்டுமின்றி எல்லாவித மக்களும் தங்கள் சட்டைப் பையில் காந்தி மகானை பணமாக வைத்துள்ளனர். இது, காந்திக்கு மட்டும் பெருமையான விஷயமன்று. ஒட்டுமொத்த உலகிற்கே பெருமிதமான ஒன்று.
www.gandhi.org