நான் முழுமையாக நம்புகின்ற, உணருகின்ற காந்தியக் கோட்பாடுகள், அன்பும் அகிம்சையும். இந்த இரண்டு கோட்பாடுகள்தாம், உலகில் இப்பொழுது உள்ள - இனி வரப்போகின்ற அனைத்து தீமைகளுக்கும் மாற்று.
அன்பு, அகிம்சை என்ற இந்த இரண்டு கோட்பாடுகளும் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையாக, வாழும் கலையாக மாறும்போது உலகில் நாம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் எல்லாவித பாதிப்புகளும், சீர்குலைவுகளும் படிப்படியாகக் குறைந்து, சமநிலையை பெறும் என்பது முற்றிலும் உண்மை.
அகிம்சை எனும் பேராயுதத்தால் உலகையே வெல்லலாம் என்பதை உணர்த்தி, வென்றும் காட்டி, இன்று உலக அமைதியின் சின்னமாய் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும், நமது தேசத் தந்தையின் வாழ்க்கை முறைகளான அன்பு, அகிம்சை, சமத்துவம், உண்மை, சகோதரத்துவம் ஆகியவைகளை அனைவரும் பின்பற்றினாலே உலகம் அமைதிப் பூங்காவாக மாறும் என்பதில் அணுவளவும் ஐயமும் இல்லை.
உலகம் போற்றுகின்ற நமது நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை மற்றும் இயற்கை , மேற்கத்திய நாகரீகத்தின் பிரதிபலிப்பினால் சிறிது சிறிதாகச் சிதைந்தும் சீர்குலைந்தும் வருகின்றன. நமது பாரம்பரிய பண்புகளையும், நாகரீகத்தையும் காக்கும் விதமாக, காந்தியடிகள் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் நாடும் மற்றும் நாட்டு மக்களின் நலன் சார்ந்த எந்த எந்த நிலைமைகளை மாற்ற நினைத்திருப்பாரோ, அத்தகைய விசயங்களை கண்டுணர்ந்து அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் காந்திய நியதிகளுடன் எளிமையாக, புதுமையாக இளைஞர்கள் விரும்பும் வண்ணம், விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தி, காந்தி உலக மையம் நிறுவியதின் நோக்கம் முழுமையாக எட்டுவதில்லாமல், மிகப் பெரிய சமுதாய மாற்றத்திற்கான கருவியாக காந்தி உலக மையம் செயல்படும். இந்த முயற்சிக்கு தங்களின் மேலான ஆதரவையும், மதிப்புமிக்க கருத்துகளையும் வரவேற்கின்றோம்.
தங்கள் அன்புள்ள
எம்.எல். ராஜேஷ்
நிறுவனர், காந்தி உலக மையம். |