காந்தி ஆசிரம அறக்கட்டளை (ஜி.ஏ.டி.)
காந்தி ஆசிரம அறக்கட்டளை, மனிதகுல மேம்பாட்டிற்கான செயல்களை மேற்கொள்கிறது. வங்கதேசத்தின் நாகோலி என்ற இடத்தில் இந்த அமைப்பு உள்ளது. 1946ம் ஆண்டிலிருந்து செயல்படும் இந்த அமைப்பு, காந்தியக் கொள்கைகளான கிராமப்புற மேம்பாடு, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுகிறது. துவக்கப்பட்ட காலத்திலிருந்து, இந்த அமைப்பு அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் ஏழைகள், குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. பல விதமான தொண்டுகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பின் குறிக்கோள், நோக்கம் மற்றும் செயல்பாடுகள் என அனைத்தும் காந்தியத் தத்துவம் மற்றும் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டதே.
இப்போதும் இந்த அமைப்பு, நாகோலி, லக்ஷிம்பூர் மற்றும் பெனி மாவட்டங்களில் 5 இடங்களில் செயல்படுகிறது. 25,000 ஏழைக் குடும்பங்களுக்கு தொண்டாற்றி வருகிறது.
பின்னணி
நாகோலி பகுதியில் 1946ம் ஆண்டு நடந்த இன கலவரத்தை அடுத்து, காந்திஜியின் ஆலோசனையின் பேரில் அங்கு இந்த அமைப்பு துவக்கப்பட்டது. கலவரம் பாதித்த பகுதிகளில் காந்திஜி, நான்கு மாதங்கள் தங்கியிருந்து அமைதியை ஏற்படுத்தினார். ஜாயாக் என்ற இடத்திற்கு காந்திஜி 1947 ஜனவரி 29ம் தேதி வந்தபோது, பாரிஸ்டர் ஹேமந்தகுமார் கோஷ் என்பவர், தன் சொத்துகள் அனைத்தையும் காந்திஜிக்கு வழங்கினார். அதை வைத்து, அந்தப் பகுதியின் மேம்பாட்டிற்காக காந்திஜி, அம்பிகா காலிகங்கா அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். முதலில் காந்தி அமைதி மிஷன் என்றழைக்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனம் பின்னர் காந்தி முகாம் என்றழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதைய இடத்திற்கு மாறியது. நாடு பிரிவினை அடையும் வரை, பல தொண்டு காரியங்களில் இந்த அறக்கட்டளை மும்முரமாக ஈடுபட்டது.
நாடு பிரிவினை அடைந்ததும், இந்தப் பகுதி பாகிஸ்தான் வசம் சென்றதும், காந்திவாதிகள் சிறையில் தள்ளப்பட்டனர். காந்தி தொண்டு நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல தொண்டர்கள் வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தி அமைப்பின் சொத்துகள் சூறையாடப்பட்டன. நிலங்கள் அபகரிக்கப்பட்டன. நாகாலியில் காந்தி அறக்கட்டளையை நிர்வகித்து வந்த சாரு சவுத்ரி அப்போது கைது செய்யப்பட்டு, 1971ல் வங்கதேச உருவானபோதுதான் சிறையிலிருந்து விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் என்ற தனிநாடு உருவான பிறகு, சாரு சவுத்ரி தலைமையில், காந்திய சொத்துகள் மீட்கப்பட்டன. 1975, அக்டோபர் 2ம் தேதி வங்கதேச அரசு தன் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, காலிகங்கா அறக்கட்டளை என்ற அமைப்பு, காந்தி ஆசிரமம் டிரஸ்ட் என்ற பெயரில் மறுபடியும் உதயமானது. வங்கதேசம் மற்றும் இந்திய அரசின் பிரதிநிதிகளால் இப்போதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொறுப்பாளர்:
ஜர்ன தாரா சவுத்ரி,
செயலாளர், காந்தி ஆசிரம அறக்கட்டளை,
ஜாயாக், பேகம்கஞ்ச், நாகோலி, வங்கதேசம்.
தொலைபேசி: 0088-08-03221-8083
இ-மெயில்: gandhiashram.bd@gmail.com
இணையதளம்: http://www.gandhiashrambd.org/ |