(வி.கல்யாணம், காந்திஜியின் தனிச் செயலாளர். காந்தியை கோட்சே சுடும்போது, சற்று தொலைவில் கல்யாணம் சென்று கொண்டிருந்தார். காந்தியின் இறுதி வினாடிகளை அவர் விவரிக்கிறார்.)
பிரார்த்தனை நடைபெறும் இடத்தில் ஒரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் போய் காந்திஜி அமரவேண்டும். அவருக்காக பிரார்த்தனை கூடத்தில் காத்திருந்த 250 பேர், எழுந்து நின்றபடி கைகூப்பி, காந்திஜி வரும் வழியைப் பார்த்தபடி நின்றனர். அந்த கூட்டத்திலிருந்து திடீரென வெளிப்பட்ட கோட்சே, காந்தியை நெருங்கினான். மிக நெருக்கமாகச் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
குண்டுகளை மார்பிலும், அடிவயிற்றிலும் தாங்கிய காந்தி, ஹே ராம் என்று சொன்னார் என்று பலரும் கூறுகின்றனர். அவர் அவ்வாறு சொல்லவே இல்லை. எனக்கு நன்றாகத் தெரியும். அவர் உதடுகள் எந்த வார்த்தையையும் உச்சரிக்கவில்லை. முன்னர் அவர் ஒருமுறை கூறும்போது, ராம மந்திரத்தை சொல்லியபடியே உயிர் துறக்க விரும்புகிறேன் என்றார். அதை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட கதைதான், ஹே ராம் என்று காந்தி இறக்கும் தருவாயில் கூறினார் என்பது.
காந்தி சுடப்பட்டார் என்று தெரிந்ததும், அவரைச் சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது. நான் அவர் அறைக்கு ஓடிச் சென்று, பிரதமர் நேரு அலுவலகத்திற்கு போன் செய்து, காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலைத் தெரிவித்தேன். கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஐந்து நிமிடத்திற்கு முன் சென்றிருந்த உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வீட்டுக்குச் சென்று, காந்தி இறந்த தகவலைத் தெரிவித்தேன். விரைந்து மீண்டும் பிர்லா ஹவுஸ் வந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் பிர்லா மந்திர் முன் கூடியிருந்தனர். அதன் கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
உள்ளே ரத்த வெள்ளத்தில் மிதந்த காந்தியின் உடலை, துõக்கிக் கொண்டு அவர் அறைக்குக் கொண்டு சென்றனர். சிறிது நேரம் வரை அவர் உடல் வெதுவெதுப்பாகத்தான் இருந்தது. காந்தியின் ரத்தம் கொட்டிய மண்ணை பலரும் எடுத்து, அந்த இடத்தையே பள்ளமாக ஆக்கியிருந்தனர்.
அலறி அடித்தபடி வந்த படேல், பாதுகாப்பிற்கு போலீசாரை வைத்துக் கொள்ளுங்கள் என்று பலமுறை சொன்னோமே கேட்காமல் இருந்துவிட்டாரே என்று கதறி அழுதார். அப்போது மாலை நேரம் 5.17. படேலுடன் 5.10 வரை பேசிக் கொண்டிருந்த காந்திஜி, 7 நிமிடங்களுக்குள் மறைந்துவிட்டார். |