MUSEUMS
Sabarmati Ashram & Museum, Ahmedabad
saba

அறிமுகம்
    சபர்மதி ஆசிரமம் முன்னர் சத்தியாகிரக ஆசிரமம் என அழைக்கப்பட்டது. ஜீவன்லால் தேசாய் என்ற பாரிஸ்டருக்குச் சொந்தமான, அகமதாபாத்தில் உள்ள கோச்சராப் பங்களாவில் சத்தியாகிரக ஆசிரமம் செயல்பட்டு வந்தது. பின்னர், சபர்மதி நதியின் கரையில் உள்ள தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்திஜியின் அகமதாபாத் ஆசிரமத்திற்கு சபர்மதி ஆசிரமம் என்ற பெயர் வந்தது. இந்த ஆசிரமத்தில் காந்திஜி, 1915 முதல் 1933 வரை தங்கியிருந்தார். அதற்குப் பிறகு இங்கு ஆசிரமம் செயல்படவில்லை. பல வரலாற்றுச் சம்பவங்கள் இந்த ஆசிரமத்தில்தான் நடந்தேறின.

வரலாறு:

    இந்த இடம்தான் நமக்கு மிகவும் சரியான இடம். உண்மைக்காகவும், அச்சமில்லா உணர்வை வளர்த்துக் கொள்வதற்கும் இதை விடச் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த சபர்மதி ஆசிரமத்தை முதன் முதலில் வந்து பார்த்த காந்திஜி சொன்ன வார்த்தைகள் இவை.

    காலியாகக் கிடந்த இடத்தில் ஆசிரமம் அமைக்கப்பட்டது. 36 ஏக்கர் பரப்பளவில் ஆசிரமம் அமைந்திருந்தது. அதற்கான நடவடிக்கைகள் துவங்கியபோது இந்த இடத்தில் ஏராளமான பாம்புகள் தென்பட்டன. அவற்றைக் கொல்லக்கூடாது என்று காந்திஜி உத்தரவிட்டார்.

    சத்தியாகிரக ஆசிரமம் பின்னர் ஹரிஜன ஆசிரமம் என்று அழைக்கப்படலாயிற்று. இரண்டு முக்கிய குறிக்கோளுடன் அந்த ஆசிரமம் செயல்பட்டது. ஒன்று, உண்மையைத் தேடுதல். மற்றொன்று வன்முறை நாட்டமில்லாத அமைதிக் குழுவை கண்டறிதல். அந்தக் குழுவின் அங்கத்தினர் மூலம் நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

    சத்தியாகிரக ஆசிரமம், 1915, மே 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அந்த நேரம் காந்திஜி, தென் ஆப்ரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்தார். முதலில் 25 உறுப்பினர்களுடன் ஆசிரமம் துவக்கப்பட்டது. 1917 ஜூலை மாதம், சபர்மதி ஆற்றங்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட இடத்திற்கு ஆசிரமம் மாற்றப்பட்டது. காந்திஜியின் கட்டுப்பாட்டில் சமூக வாழ்க்கை வாழ்ந்த ஆசிரமவாசிகள், உண்மையையும் வன்முறையற்ற அகிம்சை கொள்கைகளையும் பின்பற்றினர்.

ஆசிரமம் - ஒரு பார்வை

    சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜி தங்கியிருந்த காலங்களில் ஹிருதயா (இருதயம்) குஞ்ச் என்ற குடிலில்தான் வசித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்தில் இப்போதுகூட, காந்திஜி பயன்படுத்திய எழுது மேஜை, காதி குர்தா, அவர் நுõற்ற நுõல், அவரின் சில கடிதங்கள் போன்றவற்றைப் பார்வையாளர்கள் பார்க்க முடியும்.

நந்தினி:
     ஹிருதய குஞ்ச்-க்கு வலது புறத்தில் அமைந்திருந்த இடத்தின் பெயர் நந்தினி. காந்திஜியைப் பார்க்க வரும் வெளிநாட்டினர், விருந்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டனர்.

வினோபா குடிர்:
     ஆச்சார்ய வினோபாவே அந்த இடத்தில் தங்கியிருந்ததால், அந்த இடம் வினோபா குடில் என அழைக்கப்பட்டது. அதுபோல, மீரா குடிர் என்றும் அழைக்கப்பட்டது. காந்திஜியின் சிஷ்யைகளில் அவரும் ஒருவர். பிரிட்டீஷ் அட்மிரல் ஒருவரின் மகளான மீரா பென் அந்த குடிலில் தங்கியிருந்ததால், அதற்கு மீரா குடில் என்ற பெயர் வந்தது.

உபாசனா மந்திர்:
     ஹிருதய குடிருக்கும் மகன் குடிருக்கும் (ஆசிரம மேலாளரான மகன்லால் காந்தி அந்த குடிலில் தங்கியிருந்ததால், அந்த இடம் மகன் குடிர் என்றழைக்கப்பட்டது) இடைப்பட்ட பகுதியில் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த இறைவணக்க மைதானம் உபாசனா மந்திர்.

காந்தி சங்கராஹலாயா:
     ஆசிரமத்தின் முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. ஆசிரமத்திற்குள் அமைந்த அருங்காட்சியகம் இது. பண்டிட் ஜவகர்லால் நேரு இந்த அருங்காட்சியகத்தை 1963ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி துவக்கினார். ஐந்து அலகுகளைக் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் ஒரு நுõலகம், இரண்டு புகைப்பட கலைக்கூடங்கள் மற்றும் ஒரு கலையரங்கமும் இருந்தது.

     இந்த அருங்காட்சியகத்தில், காந்திஜியின் 8 முழு உருவப்படங்கள், அவரின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களை உணர்த்தும் வகையில் உள்ளன. காந்திஜியின் முந்தைய எழுத்துகளின் தொகுப்புகளும் இங்கு இருந்தன. இங்கு, காந்திஜி எழுதிய 34,066 கடிதங்கள், 8,633 கையெழுத்துப் பிரதிகள், 6,367 புகைப்பட நெகட்டிவ்கள், காந்தியை பாராட்டி எழுதப்பட்ட 155 பாராட்டுக்கடிதங்கள், 134 ரீல்களில் அடக்கப்பட்ட அவரின் எழுத்துகள் அடங்கிய மைக்ரோ பிலிம், காந்திஜி மற்றும் சுதந்திர போராட்டம் குறித்த 210 படங்கள் அங்கு உள்ளன. நுõலகத்தில் 30,000 புத்தகங்கள் உள்ளன. இவை தவிர்த்து, காந்திஜியின் நினைவாக வெளியிடப்பட்ட நாணயங்கள், நினைவுப்பொருட்கள், அஞ்சல் முத்திரைகள் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த அருங்காட்சியகம் 24,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 20க்கு 20 என்ற அளவிலான 54 அறைகளைக் கொண்டது. மாநாட்டு அறை, கலையரங்கம், திரைப்படக்கூடம் போன்றவையும் உள்ளது.

    இங்கு காந்திஜியின் நுõல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
முகவரி:
             சபர்மதி ஆசிரமம், காந்தி சமராக் சங்ரஹாலாயா,
             காந்தி ஆசிரமம், அகமதாபாத், 380027.
             குஜராத், இந்தியா.
தொலைபேசி: அலுவலகம்: 2755 7277, இல்லம்: 2755 6659
தொலை அச்சு: 2756 0569
இ-மெயில்: mahatma@sabarmati.org
இணையதளம்: www.gandhiashram.org.in