இடத்திலிருந்த தன் எல்லா விதமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார்.
வரலாறு:
1930ம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு, உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தி நடத்தியபோது, சுதந்திரம் கிடைக்கும் வரை சபர்மதி ஆசிரமத்திற்குத் திரும்ப மாட்டேன் என்று உறுதி எடுத்தார். அந்த நேரம் சுதந்திரம் கிடைக்கவில்லை. காந்தியும் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நாட்டின் மத்திய பகுதியில் தனக்கு ஒரு தலைமை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த நேரத்தில், ஜாம்னலால் பஜாஜ் அழைப்பின்பேரில், 1934ம் ஆண்டு வார்தா வந்திருந்தார் காந்திஜி.
1936, ஏப்ரல் மாதம், ஷிகான் என்ற இடத்தில் காந்திஜி தன் இல்லத்தைக் கட்டினார். அந்த கிராமத்திற்கு, சேவாகிராமம் என்று பெயர் மாற்றம் செய்தார் காந்திஜி. அதற்கும் ஒரு காரணம் உண்டு. ஷிகான் கிராமத்திற்கு அருகிலேயே அதே பெயரில் மற்றொரு கிராமம் இருந்தது. காந்திஜிக்கு வரும் கடிதங்கள் பலவும் அந்த கிராமத்திற்குச் சென்று விட்டன. இதனால் ஏற்பட்ட சிரமங்களை சரிசெய்யும் வகையில்தான், ஷிகான் கிராமம் சேவாகிராமமாக மாறியது.
நாக்பூரிலிருந்து 45 கி.மீ. தொலைவில் வார்தா உள்ளது. அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் சேவாகிராமம் உள்ளது. கிராமங்களுக்கு சேவை செய்யும் கிராமம் என்ற பொருளில் அந்த கிராமத்திற்கு அந்தப் பெயரை வைத்தார். சேவாகிராமத்திற்கு காந்திஜி வரும்போது அவருக்கு வயது 67. அதற்குப் பிறகு சேவாகிராமம் பலரையும் ஈர்க்கும் பகுதியாக மாறிவிட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முடிவுகள் இந்த இடத்தில்தான் எடுக்கப்பட்டன.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
ஆதி நிவாஸ்:
சேவாகிராமம் ஆசிரமத்தில் முதலில் கட்டப்பட்ட குடில், ஆதி நிவாஸ். துவக்கத்தில், இந்த ஒரு குடிலில்தான், தன் ஆசிரமவாசிகளுடன் காந்திஜி தங்கியிருந்தார். இந்த குடிலின் வடக்குப்பகுதி வராந்தா சாப்பிடும் அறையாக செயல்பட்டது. திறந்த வெளியில் காலையிலும் மாலையிலும் இறைவணக்கம் நடந்தது.
பா குடி:
காந்திஜியின் மனைவி கஸ்துõரிபாய் தங்கியிருந்த குடில், அவர் பெயரில் பா குடில் என அழைக்கப்பட்டது.
பாபு குடி:
காந்திஜி தங்கியிருந்த இடம் பாபு குடி. அவரின் மசாஜ் மேஜை, துõங்கும் கட்டில் அடுத்த அறையில் இருந்தன. வராந்தாவில் இறைவணக்கம், காலையிலும் மாலையிலும் நடந்தது. இப்போதும் அதே இடத்தில் நடந்து வருகிறது.
காந்தியின் தலைமைச் செயலகம்:
இந்த அறையில் இருந்தவாறுதான், உலகம் முழுவதும் காந்திஜி தன் தகவல் தொடர்பை மேற்கொண்டார். காந்திஜியுடன் பேசுவதற்காக பிரிட்டீஷார் வைத்திருந்த போன், பாம்பு பிடிக்கும் கூண்டு போன்றவை இப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்படும் பாம்புகள், கொல்லப்படாமல் காட்டிற்குள் கொண்டு விடப்பட்டன.
ஆகிரி நிவாஸ்:
கடைசியாக தங்கிய இடம் என்ற பொருள்பட, ஆகிரி நிவாஸ் என அழைக்கப்படுகிறது. கிராமத்தினருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக கட்டப்பட்ட இடம் அது. சேவாகிராமம் ஆசிரமத்தில் காந்திஜி தங்கியிருந்தபோது, நோகாலி என்ற இடத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கடுமையான இருமல், சளி தொந்தரவு இருந்தது. இதற்காக அவர் சில நாட்கள் இந்த இடத்தில் தங்கியிருந்தார். அதற்குப் பிறகு நோகாலி புறப்பட்டுச் சென்றவர், திரும்ப வரவேயில்லை. அதனால்தான் இந்த இடம் ஆகிரி நிவாஸ் என அழைக்கப்படலாயிற்று.
பாபுவின் சமையலறை:
காந்திஜி பயன்படுத்திய சமையலறையில் இன்னமும் சமையல் நடைபெறுகிறது. அவர் சில நேரங்களில் பயன்படுத்திய அம்மிக்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அத்ய ஆதி நிவாஸ்:
வார்தாவிலிருந்து சேவாகிராமம் வந்த காந்திஜி தங்கி ஓய்வெடுத்த பகுதி இது.
பார்ச்சூர் குடி:
சமஸ்கிருத பண்டிதர் ஸ்ரீ பார்ச்சூர் தங்கியிருந்த இடம் இது. தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சில சமயங்களில் காந்திஜி சேவை புரிந்துள்ளார்.
மகாதேவ் குடி:
காந்திஜியின் தனிச் செயலாளர் அல்லது அந்தரங்க காரியதரிசி மகாதேவ தேசாய் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்த இடம். பாபு குடிலுக்கு அருகில் உள்ளது.
கிஷோர் நிவாஸ்:
காந்திஜியின் நெருங்கிய நண்பரும் ஹரிஜன் வாரந்திர பத்திரிகையின் பகுதிநேர ஆசிரியருமான கிஷோரிலால் மன்சூருவாலா தங்கியிருந்த இடம். அவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்ததால், குடிசையாக முதலில் இருந்த அந்த இடத்தை செங்கல், சிமென்ட் வைத்து துõசி கிளம்பாத அறையாகக் கட்டச் சொன்னார் காந்திஜி.
ரஸ்தம் பவன்:
ஆசிரமத்திற்கு வரும் விருந்தினர்கள் தங்குவதற்காக ரஸ்தம்ஜியின் மகன் கட்டிய நான்கு அறைகள் கொண்ட பகுதி ரஸ்தம் பவன்.
காந்திஜி பொருட்காட்சி:
காந்திஜி பயன்படுத்திய பொருட்களை வைத்து இந்த பொருட்காட்சி, 1991ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது.
யாத்திரி நிவாஸ்: 1982ம் ஆண்டு அரசால் கட்டப்பட்ட இந்த பகுதியில், ஆசிரமத்தைப் பார்வையிட வருபவர்கள் தங்க வைக்கப்பட்டனர். பயிற்சி முகாம் உட்பட பல சேவைகள் இந்த இடத்தில் இப்போது நடத்தப்படுகின்றன.
முகவரி:
சேவாகிராமம் ஆசிரமம் பிரதிஸ்தான்,
சேவாகிராமம், வார்தா, 442102.
மகாராஷ்டிரா, இந்தியா.
தொலைபேசி: 91-7152284753/284754. |