Facebook
Peace 2020    |   Save Nature 4 Future   |   Gandhi Memoribila on October 2nd 2015   |      We 2 Ours 2      |    Chennai walkathon 2016
மகாத்மாவைப் பற்றிய சேகரிப்புகள்  
அஞ்சல் தலைகள்
நாணயங்கள்
ரூபாய் தாள்கள்
டோக்கன்கள்(அடையாள பொருட்கள்)
அஞ்சல் அட்டைகள்
சிறப்பு உறை & முத்திரை
தொலைபேசி அட்டை
பிறந்த தேதி ரூபாய் தாள்கள்
செய்தித்தாள்கள்
கையெழுத்து
புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள்
புகைப்படங்கள்
சிலைகள்
வீடியோ மற்றும் குரல்
சிறுகதைகள்
ஓவியங்கள் மற்றும் கார்டூன்கள்
விளக்கக் காட்சிகள்
காந்திஜியின் கோயில்
அருங்கட்சியங்கள் மற்றும் ஆசிரமங்கள்
வாழ்கை வரலாறு
காலவரிசை
பாராட்டுகள்
பொன்மொழிகள்
சிறிதளவு அறியப்பட்ட உண்மைகள்
கடைசி 24 மணிநேரம்
மற்றவை
பயன்மிக்க இணைப்புகள்
 
 
   
  Gandhiji Last 24 Hours-By Stephen Murphy
   
   
  மகாத்மா காந்திஜியின் கடைசி நாள் - ஸ்டீபன் மர்பி

ஜனவரி 30, 1948. வெள்ளிக்கிழமை. அதிகாலை 3.30 மணிக்கே எழுந்துவிடுகிறார் மகாத்மா காந்தி. அன்றைய பொழுதுதான் அவரின் இறுதிப்பொழுது என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

புதுடில்லியின் அல்புகுர்க்யு சாலையில் உள்ள பிர்லா ஹவுசின் தரைத்தளத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருந்தார். தொழிலதிபர் ஜி.டி.பிர்லாவிற்கு சொந்தமான அந்த இடத்திற்கு வந்து சில காலம்தான் ஆகிறது. கல்கத்தாவில் நடந்த மதக்கலவரங்களை தன் அதிசயத்தால் கட்டுக்குள் கொண்டு வந்த காந்தியடிகள், புதிதாக சுதந்திரம் அடைந்த இந்தியாவின் தலைநகருக்கு வந்தபோதிலிருந்து அங்கும் மதக்கலவரங்கள்தான். இதனால் மிகுந்த வேதனையிலிருந்தார் காந்திஜி.

ஜனவரி 30ம் தேதியன்று, அவருக்கு 78 வயதாகி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருந்தது. டில்லியில் சண்டையிட்ட இரு மதத்தினரையும் ஒற்றுமைப்படுத்த 10 நாள் உண்ணாவிரதம் இருந்த காந்திஜி, அந்த விரதத்தை முடித்து 12 நாட்கள்தான் ஆகிறது. 10 நாட்களுக்கு முன், பிர்லா ஹவுசில் அவரைக் கொல்ல முயற்சிநடந்தது. டில்லியில் அமைதி திரும்பியிருந்தாலும், அவரின் உயிருக்கு ஆபத்து இருக்கவே செய்தது. அதையும் அவர் அறிந்தே இருந்தார்.

அவரின் கடைசி நாளும் வழக்கமான ஒழுங்காகத்தான் இருந்தது. எல்லோருக்கும் முன்னதாக எழுந்த காந்திஜி, துõங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பினார். குறிப்பாக, உதவியாளர்கள் பிரிஜ் கிருஷ்ண சண்டிவாலா மற்றும் மனு, அபா என்ற தமது தமக்கை மகள்களை எழுப்பிவிட்டார். வழக்கமாக அவருடனே தங்கியிருக்கும் அவரின் டாக்டர். சுசிலா நாயர் பாகிஸ்தான் சென்றிருந்தார். அதனால், அந்த நாளில் அவர் காந்தியுடன் இல்லை. குச்சியை எடுத்து பல் துலக்கினார்.

3.45 மணிக்கு நடுங்கும் குளிரில், வராந்தாவில் பிரார்த்தனை துவங்கியது. பகவத் கீதையை மனு வாசித்தார். முதல் இரண்டு சுலோகங்கள் வாசிக்கப்பட்டன. அவரின் தமக்கை மகளான அபா, இன்னும் படுக்கையிலிருந்து எழுந்து, பிரார்த்தனைக்கு வராதது காந்திக்கு எரிச்சல் ஊட்டியது. ‘இவற்றை நான் விரும்பவில்லை. இதுபோன்றவற்றைப் பார்க்க நான் இங்கே ரொம்ப காலத்திற்கு இருக்கப் போவதில்லை’ என்றார்.
எந்த சுலோகம் வாசிப்பது என்று மனு கேட்டாள். காந்தி தனக்கு மிகவும் பிடித்த குஜராத்தி பாடல் ஒன்றைப் பாடச் சொன்னார்.

பிரார்த்தனை முடிந்தது. சாய்த்து வைக்கப்பட்டிருந்த தன் கைத்தடிகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றார் காந்திஜி. அறைக்கு வெளியே இன்னமும் இருள் விலகவில்லை. உள்ளே இருந்த மனு, தன் கால்களை போர்வையால் மூடியிருந்தாள். அந்த அளவிற்கு குளிர் அதிகாலையில் தாக்கிக் கொண்டிருந்தது. முதல்நாள் இரவில் தயாரித்திருந்த, காங்கிரஸ் அரசியல் அமைப்புச் சட்ட வரைவில் சில திருத்தங்கள் செய்தார். அதுதான் அவரின் கடைசி உயிலாகவும், இந்திய தேசத்தின் இறுதி ஏற்பாடாகவும் இருக்கப் போகிறது.

4.45 மணிக்கு, தேன், எலுமிச்சை சாறு, சுடுநீர் அருந்துகிறார். அதற்கு ஒரு மணி நேரம் கழித்து, தினமும் காலையில் அருந்தும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு சாறு அருந்துகிறார். கடந்த சில நாட்களாக தீவிர உண்ணாவிரதம் இருந்ததால், உடல் அலுப்பு காரணமாக, ஆரஞ்சு சாறு குடித்த சிறிது நேரத்தில் துõக்கம் வந்ததால் படுக்கச் செல்கிறார். அரை மணி நேரம்தான் துõங்கியிருப்பார்.

படுக்கையிலிருந்து எழுந்து, தன் கடித கோப்புகளை எடுத்து வருமாறு பணிக்கிறார். முந்தைய நாள் இரவில், கிஷோரிலால் மன்சூராவாலாவுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் சில திருத்தங்கள் செய்த காந்திஜி, அதை அனுப்ப மனுவிடம் கொடுக்கிறார். சில காலம் காந்திஜியுடன் மன்சூராவாலா தங்கியிருந்தபோது, மனுவுக்கும் மன்சூராவாலா பழக்கமாக இருந்திருந்தார். ‘பாபு, நாம் பிப்ரவரி 2ம் தேதி சேவாகிராமம் செல்கிறோமா?’ மனு கேட்டாள்.

அதற்கு காந்தி பதிலளிக்கிறார். ‘எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்? சேவாகிராமம் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தால், அதை இன்று மாலை இறைவணக்கத்தில் கூறுகிறேன். பின்னர் அது ரேடியோவில் ஒலிபரப்பப்படும்’ என்றார்.

தன்னுடன் நடைபயிற்சிக்கு வருமாறு மனுவை காந்திஜி அழைக்கிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான ஜலதோஷம், தொண்டை பிரச்னை இருந்ததால், வெல்லத்துடன் சேர்த்து பொடி செய்யப்பட்ட கிராம்பை அவர் பயன்படுத்தி வந்தார். அந்தப் பொடி தீர்ந்துவிட்டது. அதைத் தயாரிக்கும் பணியிலிருந்த மனு, ‘கிராம்பு பொடி தீர்ந்துவிட்டது. நான் அதைத் தயாரிக்கப் போகிறேன். நீங்கள் நடைபயிற்சிக்குப் போய்வாருங்கள்’ என்கிறாள்.
‘இப்போதே எதற்காக கிராம்பு பொடி தயாரிக்கிறாய்? இன்னும்ராத்திரி வரை இருக்கிறது. ராத்திரி நான் உயிருடன் இருப்பேனா என்பதே தெரியாது. அப்படி இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறார் காந்தி.

காலை 7 மணி. ரஜென் நேரு என்ற பெண்மணி காந்தியைச் சந்திக்கிறார். அமெரிக்கா செல்ல உள்ள அவர், காந்தியிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தார். அவரிடம் சில நிமிடங்கள் பேசியிருந்துவிட்டு, அறைக்குள் திரும்பிய காந்தி, தன் செயலாளர் பியாரிலாலிடம், காங்கிரஸ் அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து தான் எழுதியிருந்தவற்றைக் கொடுத்து, ‘கவனமாகப் பார்த்துக் கொள். நான் ரொம்ப மனக்கஷ்டத்தில் எழுதியது. ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்’ என்று கூறிவிட்டு, மசாஜ் எடுத்துக் கொள்ள செல்கிறார். பின்னர் காந்தியை மனு குளிப்பாட்டி விடுகிறார்.

காலை 9.30 மணி. காந்திஜியின் காலை உணவு நேரம். சாப்பிட்டுக் கொண்டே, செயலாளர் பியாரிலாலிடம், காங்கிரஸ் அரசியல் அமைப்புச் சட்ட வரைவு குறித்து கேட்கிறார். பேச்சின் ஊடே, முதல் நாள் இரவில் இந்து மகாசபா தலைவர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடனான சந்திப்பு குறித்து இருவரும் விவாதிக்கின்றனர். ‘சியாமா பிரசாத் அவ்வாறு காட்டமாக பேசியிருக்கக்கூடாது’ என்று காந்தி சொல்கிறார். இப்படியே பேச்சு நீண்டுகொண்டு செல்கிறது.

காலை 10.30 மணி. களைப்பில் துõங்கிவிடுகிறார். மதியம் 12 மணி வாக்கில் எழுந்திருக்கிறார். சுடுநீரில் தேன் கலந்து குடிக்கிறார். சிறுநீர் கழிக்க எழுந்து செல்கிறார். இதை திடீரெனப் பார்த்த மனு, ‘பாபு என்ன இது. இப்படித்தனியாகச் செல்கிறீர்கள்? தனியாகச் செல்லலாமா ?’ என்று கேட்கிறார்.

மனுவைப் பார்த்து சிரித்தபடி, ‘இது நல்லா இருக்கிறதே. தனியாகப் போகிறேன். தனியாகப் போகிறேன்’ என்ற தாகூரின் கடைசி வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டு வந்து இரண்டு முறை திரும்பத் திரும்ப கூறுகிறார்.
பகல் 12.30 மணிக்கு, டில்லி முஸ்லிம் தலைவர்கள் சிலருடன் பேசுகிறார். இரவு 7 மணிக்கு, பிரதமர் நேரு, துணை பிரதமர் வல்லபாய் படேல் ஆகியோர் சந்திக்க நேரம் வாங்கியிருந்தனர்.

மதிய உணவிற்குப் பிறகு, காந்தியின் கால்களை மனு பிடித்து விட்டவாறு உள்ளார். பத்திரிகையாளர் ஒருவர் காந்தியின் அறையில் உள்ளார். அவர், ‘பிப்ரவரி 1ம் தேதி பாபு, சேவாகிராமம் செல்லப் போகிறாரா?’ என்று கேட்டார். ‘யார் சொன்னார்கள்? நான் செல்லவில்லை. அது வேற காந்தியாக இருக்கும்’ என்கிறார் கிண்டலாக.

பகல் 1.30 மணிக்கு, மாஸ்டர் தாரா சிங் எழுதிய கடிதத்தை உதவியாளர் பிரிஜ்கிருஷ்ணா வாசிக்கிறார். காந்தியின் உடல்நிலை மீது அக்கறை கொண்டிருந்த தாரா சிங், இமயமலைக்குச் சென்று ஒய்வெடுக்க காந்தியைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு, கண்தெரியாத சிலர் காந்தியை சந்திக்க வந்தனர். அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

பகல் 2.15. வழக்கமான சந்திப்புகள் துவங்குகின்றன. இரண்டு பஞ்சாபியர்கள், இலங்கையிலிருந்து வந்த ஒருவர், ஒரு சிறுமி, கல்லுõரி பேராசிரியர், பஞ்சாபிலிருந்து வந்த ஒரு குழுவினர் என பலரையும் சந்தித்து, ஒவ்வொருவரிடமும் பேசி அவர்களை வழியனுப்பி வைக்கிறார்.

மாலை 4 மணி. பேட்டி, சந்திப்பு எல்லாம் ஒருவாறாக முடிவடைகிறது.

காந்தியை சந்திக்க, சர்தார் வல்லபாய் படேல், அவர் மகள் மணி வருகின்றனர். அப்போதுதான் காந்தி எழுந்து பாத்ரூம் செல்கிறார். சிறிது நேரம் காத்திருந்தவர்களை, காந்தி சந்திக்கிறார். படேல் அல்லது நேரு, அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும் என்று காந்தி சொல்கிறார். இதை நான் மாலை இறை வணக்கத்திற்குப் பிறகு அறிவிக்கப் போகிறேன் என்று கூறுகிறார். விவாதம் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த நேரம், வெளியே இருந்து சத்தம் கேட்கிறது. காந்தியை சந்திக்க கத்தியவாக்கில் இருந்து வந்தவர்கள், காந்தியைப் பார்க்க வேண்டும் என்கின்றனர். அவர்களிடம் மனு, படேலுடன் காந்தி பேசிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரமாகும் என்கிறார். நாங்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று அந்த இருவரும் அடம்பிடிக்கின்றனர். சத்தம் கேட்டு, மனுவை அழைத்த காந்தி, என்ன என்று கேட்கிறார். ‘இப்போது முடியாது. மாலை இறைவணக்கத்திற்குப் பிறகுதான். அதுவும் அப்போது நான் உயிருடன் இருந்தால்தான்’ என்கிறார்.
நாதுராம் விநாயக் கோட்சே.
37 வயது இந்து தீவிரவாதி.
பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் ஓய்வறை எண் 6ல் தங்கியிருந்த கோட்சே, வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து விடுகிறான். இன்றுதான் அவன் காந்தியை கொல்ல உள்ளான். இந்த சதித்திட்டத்தில் அவனுக்கு உதவியாக, நாராயண் ஆப்தே, விஷ்ணு கர்கரே என 7 பேர் டில்லிக்கு வந்திருந்தனர். ஆனால் மூன்று பேர்தான் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்றவர்கள் இந்தப்பணியில் நேரடியாக இறங்கவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி கொடுக்கப்பட்டிருந்தது. கோட்சேதான், காந்தியைச் சுட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவன் காந்தியை நெருங்குவதற்கான வழிகளையும், அவனை பிறர் தடுக்காமல் இருப்பதற்கான வழிகளையும் மற்றவர்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. துப்பாக்கியை அவ்வளவாகப் பயன்படுத்தத் தெரியாத கோட்சேயிடம், 7 ரவைகள் கொண்ட ஆட்டோமேடிக் பிஸ்டல் இருந்தது.

மதிய நேரத்தில் இந்த கொலைகாரக் குழுவினர், ரயில் நிலையிலிருந்து வெளியேறி, பிர்லா மந்திர் செல்கின்றனர். எல்லோரும் இறைவனை வணங்க, கோட்சே மட்டும் அவர்களுடன் சும்மா இருக்கிறான். அறைக்குத் திரும்பிய கோட்சே, புதிதாக வாங்கி வைத்திருந்த காக்கி நிற உடையை அணிந்து கொள்கிறான். குதிரை வண்டியைப் பிடித்து, காந்தி தங்கியுள்ள பிர்லா ஹவுசுக்கு தானியங்கி துப்பாக்கியுடன், காந்தியை கொல்லும் நோக்கத்தில் பயணிக்கிறான். அதுபோலவே, சற்று நேரம் கழித்து, ஆப்தே மற்றும் கர்கரே மற்றும் சிலர் வேறு வேறு குதிரை வண்டிகளில் பிர்லா ஹவுஸ் வந்து இறங்குகின்றனர்.

இந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி, காந்தியைக் கொல்ல முயற்சி நடந்ததால் அதிர்ச்சி அடைந்த நேரு மற்றும் படேல், 30 பேர் கொண்ட போலீஸ் படையை காந்தியின் காவலுக்கு அனுப்ப உத்தரவிடுகின்றனர். ஆனால், அதை காந்தி விரும்பவில்லை. எனினும், தலைவர்கள் வலியுறுத்தியதன் பேரில், ஒப்புக் கொள்கிறார். அதே சமயம், இறைவணக்கம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களை போலீசார் சோதனையிடக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்.

மாலை 5 மணி. பிர்லா மந்திர் உள்ளே கோட்சே கும்பல் நுழைந்துவிட்டது. சீருடை மற்றும் சீருடை அணியாத போலீசார் ஏராளமானோர் அங்கே இருக்கின்றனர். எனினும், யாரும் யாரையும் சோதனையிடவில்லை. திருப்தி அடைந்த அந்த கும்பல், இறைவணக்கத்திற்காக கூடியிருப்பவர்களுடன் கலந்துவிட்டது.

மாலை 5 மணிதான் இறைவணக்கத்திற்கான நேரம். வழக்கமாக காலம் தவறாத காந்தி. அன்று 5.10 மணியாகியும், சர்தார் படேலுடன்தான் பேசிக் கொண்டிருந்தார். இறைவணக்கத்திற்கு நேரமாகிவிட்டது என்பதை உணர்ந்த மனு, கடிகாரத்தை காண்பிக்கிறார். புரிந்து கொண்ட காந்திஜி, ‘நான் உங்களிடமிருந்து இப்போது விடைபெறுகிறேன்’ என்று கூறியபடி, கதகதப்பிற்காக ஷால் ஒன்றை போர்த்திக் கொண்டு வெளியே வருகிறார்.

காந்தியின் இருபுறமும் மனு மற்றும் அபா. அவர்கள் தோளின் மீது தன் இரு கைகளையும் போட்டவாறு நடந்து வருகிறார். அவர்களுக்குப் பின்னால், செயலாளர் பிரிஜ் கிருஷ்ணா, கத்தியவாத்திலிருந்து வந்திருந்த இருவர், பின் சற்று தொலைவில் காந்தியின் தனிச்செயலாளர் கல்யாண் மற்றும் பிர்லா குடும்பத்தினர் மற்றும் சிலர் வந்தனர். சமீபத்தில் அவரின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட போலீஸ்காரர் குருபச்சன் சிங், காந்திக்கு சற்று அப்புறமாக நடந்து வருகிறார்.

பிரார்த்தனை நடக்கும் பகுதிக்கு காந்தி நடந்து சென்று கொண்டிருக்கிறார். 200 அடி துõரம்தான் இருக்கிறது. அவர் இனிமேல் நடக்கயிருப்பது இந்த துõரம்தான். இத்தனை வயதில் எத்தனை துõரம் நடந்திருப்பார். எவ்வளவு இடங்களைச் சுற்றியிருப்பார். இப்போது 200 அடி இறுதி துõரத்தில் நடந்து கொண்டிருக்கிறார்.

போர்பந்தரில் துவங்கிய அவரின் பயணம் அப்படியே, பாம்பே, டர்பன், பீட்டர்மரிட்ஸ்பெர்க், ஜோகன்னஸ்பர்க், பீனிக்ஸ் செட்டில்மென்ட், டால்ஸ்டாய் பார்ம், சாம்பரான், சபர்மதி, எரவாடா, தண்டி, கின்ஸ்லே ஹால், செயின்ட் தாமஸ் அரண்மனை, சேவாகிராமம், ஆகாகான் அரண்மனை, நோகாலி, கல்கத்தா, டில்லி, இப்போது டில்லியில் உள்ள பிர்லா ஹவுசில் அவரின் பயணம் நிறைவடையப் போகிறது.

பேத்திகளுடன் சிரித்துப் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்த காந்திஜி, பிரார்த்தனை கூடம் நெருங்கிவிட்டது. பேத்திகளைப் பார்த்து, வாயை மூடுங்கள் என்று சிரித்தபடி சொல்லியவாறு, பிரார்த்தனை மையத்திற்குள் நுழைகிறார். இன்னும் சில அடி துõரங்கள்தான். அந்தத் தொலைவில் அவர் வரவை எதிர்நோக்கி ஏராளமானோர் அவர் பாதையைப் பார்த்திருக்க, அவர்களை நோக்கி கைகளை கூப்பியபடி நடந்து செல்கிறார் காந்தி.

திடீரென அவர் எதிரில் தோன்றுகிறான் கோட்சே. காந்தியை துரத்திலிருந்து சுடப் போவதாகத்தான் திட்டம். அதை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்ட கோட்சே, காந்திக்கு எதிராக வருகிறான். அவனுக்கும் காந்திக்கும் இடையே ஒன்றிரண்டு அடி துõரம்தான் இருந்தது. காந்தியின் காலைத் தொடுவது போல கீழே குனிந்து, நமஸ்தே காந்திஜி என்கிறான். பதிலுக்கு கைகளைக்கூப்பி நமஸ்தே என்று சொல்கிறார். பேத்தி மனு, கோட்சேவை, துõரச் செல்லுங்கள். ஏற்கனவே காந்திக்கு நேரமாகிவிட்டது என்று கோட்சே தோளைப் பிடித்து தள்ளுகிறாள். அவளை துõங்கி தள்ளிவிட்ட, குனிந்து எழுந்த கோட்சேயின் கைகளில் இத்தாலி தயாரிப்பான பெரட்டா பிஸ்டல். என்ன நடக்கிறது என்று யாரும் அறிவதற்கு முன்னதாக, துப்பாக்கியின் விசையை அழுத்தி, மார்பு மற்றும் அடிவயிற்றில் குண்டுகளைப் பாய்ச்சுகிறான். மூன்று குண்டுகளைத் தாங்கிக் கொண்டு, ஹே ராம், ஹே ராம் என்கிறார். ரத்தம் பீறிட்டு அடிக்கிறது. நின்றவாறே ஒன்றிரண்டு வினாடிகளில் இறந்துவிட்டார். உயிரற்ற காந்தி மடாரென கீழே விழுகிறார். ரத்தம் பீறிட்டு பாய்கிறது. இந்த தேசத்தின் தந்தை, இறந்துவிட்டார். அவர் தலையை தங்கள் மடியில் கிடத்தியபடி பேத்திகள் இருவரும் கதறுகின்றனர். கதை முடிந்துவிட்டது. உலகம் முழுவதும் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்த காந்திக்கு, ஒரு எதிரியும் இருந்திருக்கிறான்.

காந்தி சுடப்பட்டார் என்ற தகவல், உடனடியாக காட்டுத்தீ போல பரவுகிறது. எனினும், உலக ஜோதி அணைந்துவிட்டது.

   
 
  Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved
hit counters
Designed & Maintained by
Clutch Integrated Technologies, India